மத்திய அரசின், புதிய கல்விக்கொள்கை மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் - வானதி சீனிவாசன் பேச்சு

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் என்று பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேசினார்.

Update: 2019-06-27 22:30 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட வித்யா பாரதி சார்பில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை -2019 வரைவு பற்றிய கலந்தாய்வு கூட்டம் நேற்று இரவு திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேசியதாவது:-

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றி நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், முதல்வர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. புதிய கல்விக்கொள்கையின் வரைவு பற்றித்தான் கருத்து கேட்கிறோம். பொதுவான கருத்துகளை பெற்று வரைவில் சேர்ப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மொழி மற்றும் புவியியல் ரீதியிலான கருத்துகளை அறிந்து வருகிறோம். வருகிற 30-ந் தேதிக்குள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இந்தியா முழுவதும் இருந்து பெறப்படும் கருத்துகளை ஒருங்கிணைந்து வரைவில் சேர்த்து அனுமதி பெற்று சட்டமாக்கப்பட உள்ளது. நல்ல பண்புள்ள மாணவர்களை உருவாக்கும் நோக்கத்துடன், கலாசாரம், பண்பாடு போன்றவற்றை பாதுகாக்கும் வகையிலும், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் விதத்திலும் இந்த கல்விக்கொள்கை அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இந்த கல்விக்கொள்கையின் வரைவு குறித்து கல்வியாளர்களின் கருத்துகளையும் அவர் கேட்டறிந்தார். தமிழ்நாடு தேசிய கல்வியாளர் பேரவையின் பொன்ராமன், புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து விளக்கி கூறினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்