அடுக்குமாடி கட்டிடத்தில் நுழைந்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது குடியிருப்புவாசிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவரை குடியி ருப்புவாசிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மும்பை,
மும்பை தகிசர் கிழக்கு பகுதியில் உள்ள ஷரதா தர்சன் குடியிருப்பில் பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வாலிபர் ஒருவர் பெண்ணை பின்தொடர்ந்து வந்துள் ளார்.
இந்தநிலையில் அவர் கட்டிடத்தின் லிப்டில் சென்ற போது வாலிபரும் உள்ளே சென்றார். இதனால் சந்தேகமடைந்த பெண் லிப்டை விட்டு வெளியே வந்தார். இதையடுத்து வாலிபர் பெண்ணை தள்ளிவிட்டு தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது பெண் உதவி கேட்டு சத்தம்போட்டார்.
வாலிபர் கைது
சத்தம்கேட்டு அந்த குடியிருப்பின் தரை தளத்தில் வசித்து வந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். அவர்கள் பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடிகொடுத்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.
இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர் தகிசர் பாபில்பாடா பகுதியை சேர்ந்த தேவ்நாத் குக்கு(27) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தேவ்நாத் குக்குவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.