தனியார் நிதிநிறுவன கொள்ளை வழக்கில் சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது

பொம்மிடியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.46 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சிறை வார்டன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9.44 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-06-27 23:00 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த மே மாதம் 6-ந்தேதி இரவு பிரதான கதவின் பூட்டு உடைக்கப்பட்டு லாக்கருடன் ரூ.46 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த கடத்தூர் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன், பொம்மிடி சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சிறை வார்டன் கைது

விசாரணையில், சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணிபுரிந்த தர்மபுரி சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 27), தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த செந்தில் (25), கார் டிரைவர் இளவரசன்(27), சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டியைச் சேர்ந்த கொள்ளையன் சரவணன் உள்ளிட்ட சிலருக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து செந்தில், இளவரசன், ஓமலூரை சேர்ந்த சின்னதம்பி (75), சரவணன் மனைவி சுமதி (33) ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர்.

இந்தநிலையில் சிறை வார்டன் பெருமாள் மற்றும் பிரசாந்த் (23) ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9.44 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்