ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் சென்னையில் ரூ.1,243 கோடியில் மழைநீர் வடிகால்வாய் மாநகராட்சி கமிஷனர் ஆலோசனை

சென்னையில் ரூ.1,243 கோடியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2019-06-27 23:00 GMT
சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் சிறந்த வடிகால் வசதிகளை ஏற்படுத்தி வெள்ளப்பெருக்கினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க ரூ.4 ஆயிரத்து 34 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார்.

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள அடையாறு, கூவம், கோவளம் மற்றும் கொசஸ்தலை ஆறு என 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக கூவம் மற்றும் அடையாறு வடிநிலப்பகுதிகளில் 405 கி.மீ. நீளத்திற்கு உலக வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளன.

ஆலந்தூர், புழுதிவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி, கோவளம் வடிநிலப்பகுதி என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு சுமார் 360 கி.மீ. நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்க ரூ.1,243.15 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஜெர்மன் நாட்டு வளர்ச்சி வங்கியிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.

கோவளம் வடிநிலப் பகுதிகளில் துரைப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளை உள்ளடக்கிய திட்டப்பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜெர்மன் நாட்டு வங்கி அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்