உவரியில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி வீட்டுச்சுவர்- மின்கம்பம் சேதம்

உவரியில் தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் வீட்டுச்சுவர், மின்கம்பம் பலத்த சேதமடைந்தது.

Update: 2019-06-27 22:15 GMT
திசையன்விளை,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அனல்மின் நிலைய கட்டுமான பணிகளுக்காக நெல்லை மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்குவாரியில் இருந்து எம்சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு நேற்றுமுன்தினம் இரவு ஒரு லாரி புறப்பட்டு சென்றது. லாரியை உவரியை சேர்ந்த மணி (வயது 35) என்பவர் ஓட்டினார்.

அவர் உடன்குடி அனல்மின் நிலையத்தில் மணலை கொட்டிவிட்டு பின்னர் மீண்டும் அதே லாரியில் உவரிக்கு சென்று கொண்டிருந்தார். நேற்று அதிகாலை உவரி பஜாரில் சென்றபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

அதன்பிறகும் நிற்காமல் ஓடி, அருகே உள்ள முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகராஜன் கிருபாநிதி என்பவரின் வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே புகுந்து நின்றது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது. மேலும் லாரி மோதியதில் மின்கம்பம் பலத்த சேதமடைந்தது.

இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை மீட்டனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள் மின்தடையை சரிசெய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்