போரிவிலியில் பெண் புகைப்பட கலைஞர் தற்கொலை வழக்கில் காதலன் கைது
போரிவிலியில் பெண் புகைப்பட கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பையை சேர்ந்த பெண் புகைப்பட கலைஞர் அர்பிதா. இவர் தனது கணவரை பிரிந்து போரிவிலியில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், தனது தொழில் பங்குதாரரான நிஷாங்க் சர்மா என்பவருடன் அர்பிதாவுக்கு காதல் மலர்ந்தது.
கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதும் நிஷாங்க் சர்மாவை திருமணம் செய்து கொள்ள அர்பிதா திட்டமிட்டு இருந்தார்.
இந்தநிலையில், சம்பவத்தன்று திடீரென அர்பிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதலன்கைது
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கடந்த சில தினங்களாக நிஷாங்க் சர்மாவும், அர்பிதாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையிட்டு வந்தது தெரியவந்தது.
வாட்ஸ்-அப்பில் அர்பிதாவை ஆபாசமாக திட்டி நிஷாங்க் சர்மா குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக அர்பிதாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக நிஷாங்க் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில், போலீசார் நிஷாங்க் சர்மாவை கைது செய்தனர்.