குள்ளஞ்சாவடி அருகே, திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - மாமனாருக்கு போலீஸ் வலைவீச்சு
குள்ளஞ்சாவடி அருகே திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி,
குள்ளஞ்சாவடி அருகே உள்ள மேல்பூவாணிக்குப்பத்தை சேர்ந்தவர் குப்புசாமி. விவசாயி. இவருடைய மகள் கீதாவிற்கும்(வயது 25), கருமாச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் சீனுவாசனுக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களாக கீதாவின் மாமனார் ஜெயராமன், வரதட்சணை கேட்டு கீதாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்றும் ஜெயராமன், கீதாவிடம் வரதட்சணை கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த கீதா, வீட்டில் இருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். உடலில் தீப்பற்றி எரிந்ததால் வலியால் அவர் அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கீதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீதாவின் தாயார் விஜயா(44) கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஜெயராமனை வலைவீசி தேடி வருகின்றனர்.