சோழவந்தான் அருகே பயங்கரம்: டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை, 3 பேருக்கு வலைவீச்சு

சோழவந்தான் அருகே லாரி டிரைவரை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற 3 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Update: 2019-06-26 22:15 GMT

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேட்டுநீரேத்தான் காலனி தெருவை சேர்ந்தவர் கந்தன். அவருடைய மகன் சுரேஷ் (வயது 29). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை அவர் தனது சொந்த ஊரில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேசை வெட்ட முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பியோடினார். இருப்பினும் அவர்கள் விரட்டி சென்றனர்.

பெரியாறு பாசன கால்வாய் மயானம் அருகில் சுரேஷ் அவர்களிடம் சிக்கினார். இதையடுத்து அந்த 3 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுரேசின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் சுரேசின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கொலையாளிகளை கைது செய்யும் வரை சுரேசின் உடலை எடுக்கக்கூடாது என்று கூறி அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, சுரேஷ் உடல் பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சுரேஷ் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டரா அல்லது வேறு பின்னணி ஏதும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தப்பிச் சென்ற கும்பலை தீவிரமாக தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்