போலி உதிரிபாகங்கள் விற்பனை: செல்போன் கடை விற்பனையாளர் கைது

புதுவையில் செல்போன் போலி உதிரிபாகங்களை விற்பனை செய்ததாக விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-26 22:30 GMT

புதுச்சேரி,

சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). தனியார் கம்பெனி மேலாளர். இவர் நேற்று முன்தினம் புதுச்சேரி பெரியகடை போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு செல்போன் உதிரிபாக விற்பனை கடையில் ‘ஆப்பிள் ஐ போன்’ நிறுவனத்தின் செல்போனின் போலி உதிரிபாகங்கள் விற்பனை செய்வதாக கூறியிருந்தார்.

அதன்பேரில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்–இன்ஸ்பெக்டர்கள் முருகன், முத்துக்குமார் மற்றும் போலீசார் குறிப்பிட்ட அந்த செல்போன் கடைக்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த கடையில் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் செல்போன் போலி உதிரிபாகங்கள் விற்பனைக்கு வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை ஊழியர் இமட்டா ராம் (37) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த போலி உதிரிபாகங்கள் எங்கு வாங்கப்பட்டது? கடை உரிமையாளருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்