காதல் விவகாரத்தில் மாணவியை கொல்ல முயன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை; திருப்பூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

திருப்பூரில் காதல் விவகாரத்தில் பள்ளி மாணவியை கொல்ல முயன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-06-26 23:45 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரியகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குருநாதன்(வயது 29). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரும், திருப்பூரை சேர்ந்த 16 வயது உடைய பிளஸ்–1 மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வேறு ஒருவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.

இதனால் அந்த மாணவியும் குருநாதனிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதன்காரணமாக விரக்தி அடைந்த குருநாதன் கடந்த 14–9–2015 அன்று மாலை திருப்பூர் பெரிய பள்ளி வாசல் வீதி வழியாக சென்றுள்ளார். அப்போது பள்ளி முடிந்து அந்த மாணவி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். மாணவியை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட குருநாதன், பின்னர் பீர் பாட்டிலை உடைத்து மாணவியை சரமாரியாக குத்தினார். மேலும் கல்லால் தாக்கினார். இதில் மாணவி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து மாணவியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குருநாதனும் பாட்டிலால் தன்னை குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருவரும் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து குருநாதனை கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மாணவியை கொல்ல முயன்ற குற்றத்துக்கு குருநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலைமிரட்டல் விடுத்த குற்றத்துக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தற்கொலைக்கு முயன்ற குற்றத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்