கரூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்

கரூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் அன்பழகன், போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2019-06-26 22:45 GMT
கரூர்,

அகில உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் அன்பழகன், போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் குடிபோதையினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

மாணவ-மாணவிகள்

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, உதவி ஆணையர் கலால் மீனாட்சி, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதி, துணைபோலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, பிரமகுமாரிகள் அமைப்பினர் மற்றும் தாந்தோணி அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள், தாந்தோணி அரசு கலைக்கல்லுாரி, சி.எஸ்.ஐ மற்றும் கரூர் நகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள், மதுவிலக்கு காவலர்கள், ஊர்காவல் படையினர், பிரமக்குமாரிகள் அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுவிலக்கு காவல்துறை

இதேபோல் கரூர் பஸ் நிலையம் அருகே மது விலக்கு காவல்துறை சார்பில் நடந்த ஊர்வலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர். கரூர் பஸ் நிலையம் அருகே புறப்பட்ட விழிப் புணர்வு முக்கிய வீதிகள் வழியாக சென்று திருவள்ளுர் மைதானத்தில் நிறைவடைந்தது. அய்யர்மலையில் உள்ள குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் தொடங்கி வைத்தார். அரசு கலைக்கல்லூரியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் அய்யர்மலை பகுதியில் உள்ள முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. இதில் குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், அரசு கலைக்கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்