கவசம்பட்டு பாலாற்றில், மணல் குவாரி திறப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்

கவசம்பட்டு பாலாற்றில், அரசு மணல் குவாரி திறப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-25 23:00 GMT
குடியாத்தம்,

கே.வி.குப்பம் ஒன்றியம் கவசம்பட்டு கிராமம் பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி வந்தனர்.

இந்த நிலையில் மணல் குவாரி திறக்கப்படுவதாக கூறப்பட்ட இடத்தின் அருகே கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் என்.மோகன், எஸ்.தணிகைவாசன், எஸ்.சிவக்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் ஏற்கனவே தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதாகவும், இதனால் குடிநீருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டதாகவும், எனவே இப்பகுதியில் மணல் குவாரி அமைக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர். மேலும் மணல் குவாரி திறந்தால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து விடுவோம் என்றும், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சுரங்கவியல் மற்றும் கண்காணிப்பு உதவி செயற்பொறியாளர் உமாராணி, உதவி பொறியாளர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் பிரியா உள்ளிட்டோர் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குவாரியை திறக்க அனுமதிக்க மாட்டோம் என பொதுமக்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிகாரிகள் இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறி சென்றனர். பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக நாளை (வியாழக்கிழமை) திறக்கப்படுவதாக இருந்த அரசு மணல் குவாரி திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்