குடிநீர் பிரச்சினையை தீர்க்காததை கண்டித்து துரைப்பாக்கம், ஆதம்பாக்கத்தில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
துரைப்பாக்கம், ஆதம்பாக்கத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்காத அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரில் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் குடிநீர் பிரச்சினையை தீர்க்காத அ.தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை தெற்கு மாவட்டச்செயலாளரும் சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த்ரமேஷ், தி.மு.க. சட்டதிட்ட திருத்தக்குழு செயலாளர் பாலவாக்கம் க.சோமு உள்பட பலர் கலந்துகொண்டு மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் காலிக்குடங்களுடன் கலந்துகொண்டனர்.
முற்றுகைப்போராட்டம்
இதேபோல ஆதம்பாக்கம் பகுதியில் குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி 165-வது வட்ட தி.மு.க. சார்பில் ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் உள்ள மெட்ரோ குடிநீர் வாரிய வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் ஜெகதீஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் பகுதி செயலாளர் சந்திரன், காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
பெண்கள் காலிக்குடங்களுடன் பங்கேற்றனர். தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.