திருவொற்றியூரில் மின்வெட்டை கண்டித்து சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
மின்வெட்டை கண்டித்து திருவொற்றியூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பூர்.
திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து திருவொற்றியூர் பீர் பயில்வான் தர்கா தெரு பி.சதானந்தபுரம், தியாகராயபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் சரியான பதிலும் அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
சாலைமறியல்
இதனால் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவொற்றியூரில் உள்ள தாங்கல் தெரு எண்ணூர் விரைவு சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் எண்ணூர் விரைவுச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி சீராக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.