குடிநீர் தட்டுப்பாடு இல்லை - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
கடலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 683 கிராம ஊராட்சிகளில் 25 லட்சத்து 19,509 பேர் உள்ளனர். கடலூர், சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் விருத்தாசலம் ஆகிய நகராட்சிகளில் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 77 லிட்டர் வீதமும், பேரூராட்சிகளில் நபருக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 76 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக பகுதிகளில் தினசரி பொது மக்களுக்கு அளவு குறையாமல் சீரான, சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் கடந்த 2017-18ம் ஆண்டில் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பில் 38 குடிநீர் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் மேலாண்மை பொறுப்பு நிதியின் கீழ் ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பில் 21 குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
பேரூராட்சிகளில் கடந்த 2018-19-ம் ஆண்டில் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் பேரூராட்சிகளின் பொதுநிதியிலிருந்து ரூ.1 கோடியே 51 லட்சம் மதிப்பில் 18 குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், கிராம ஊராட்சிகளில் கடந்த 2018-19-ம் ஆண்டில் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி மற்றும் 14-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.22 கோடியே 48 லட்சம் மதிப்பில் 607 குடிநீர்த் திட்டப்பணிகள் அனுமதிக்கப்பட்டு, 407 திட்டப்பணிகள் நிறைவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் (2019-20) ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் 26 குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாவட்ட அலுவலகம் மற்றும் ஒன்றியங்களில் குடிநீர் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து வரும் குறைகள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வினியோகத்தில் ஏற்படும் குறைகளை 1800 4251 941 என இலவச டெலிபோன் எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.