விவசாய பாசனத்திற்காக காவிரி, ஹேமாவதியில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் 4-வது நாளாக போராட்டம்

விவசாய பாசனத்திற்காக காவிரி, ஹேமாவதியில் தண்ணீர் திறக்க கோரி 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-06-24 22:36 GMT
மண்டியா,

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் கே.ஆர்.எஸ். அணை அமைந்துள்ளது. இந்த நிலையில் போதிய மழை இல்லாததால் மண்டியா, ஹாசன் மாவட்டங்களில் விவசாய பயிர்கள் பாசன வசதி கிடைக்காமல் கருகி வருவதாகவும், எனவே விவசாய பாசனத்திற்காக காவிரி, ஹேமாவதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். இருப்பினும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசும், நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை கண்டித்தும், விவசாய பாசனத்திற்காக காவிரி, ஹேமாவதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கர்நாடக விவசாய சங்க தலைவரும், மறைந்த எம்.எல்.ஏ. புட்டண்ணய்யாவின் மகனுமான தர்ஷன் புட்டண்ணய்யா தலைமையில் விவசாயிகள் கே.ஆர்.எஸ். அணை முன்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் நேற்றும் 4-வது நாளாக தொடர்ந்தது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் எச்.என்.ரவீந்திரா, பா.ஜனதா தலைவர் சித்தராமையா ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் பேசுகையில், மண்டியா மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள விவசாய பயிர்களை காப்பாற்ற உடனே காவிரி, ஹேமாவதியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.

இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் தர்ஷன் புட்டண்ணய்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

மண்டியா மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. இதனால் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து பயிரிட்ட பயிர்கள் கருகும் நிலை உள்ளது. எனவே சாகுபடி செய்துள்ள விவசாய பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு விவசாய பாசனத்திற்காக காவிரி மற்றும் ஹேமாவதியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாளை (அதாவது இன்று) காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடக்கிறது. இதற்கு முன்பாக விவசாய பாசனத்திற்காக காவிரி, ஹேமாவதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். இல்லையெனில் எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். கே.ஆர்.எஸ். அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க கோரி பல முறை மாவட்ட கலெக்டர் மஞ்சுஸ்ரீயிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்