மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை; நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் மோட்டார் பறிமுதல் செய்வதுடன் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் நகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. இவர்களுக்கு கடந்த காலங்களில் வைகை அணையிலிருந்து கிடைக்கப்பெற்ற குடிநீரையும், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கப் பெற்ற தண்ணீரையும் சுழற்சி முறையில் வினியோகம் செய்கின்றனர்.
கடும் வறட்சியின் காரணமாக வைகை அணையிலிருந்து கிடைக்கப் பெற்ற குடிநீர் முற்றிலும் தடை பட்டதால், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கப் பெற்ற தண்ணீரை வைத்து அனைத்து பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதாக புகார்கள் வருகின்றன. இது குறித்து நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் கூறியதாவது:
மின் மோட்டார் மூலம் குடிநீர் பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். இதனால் கடைசி பகுதிகளில் உள்ளவர்களுக்கு குடிநீர் முழுமையாக செல்வதில்லை. ஒரு பகுதிக்கு குறைந்த பட்சம் 7 மணி நேரத்திற்?கு மேல் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டி உள்ளது.
மின் மோட்டார்வைத்து தேவைக்கு அதிகமாக ஒவ்வொரு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தரை மட்ட தொட்டிகளில் சேமிக்கின்றனர். மின் மோட்டார் மூலம் குடிநீர் பிடிப்பது கண்டறியப்பட்டால் தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தின்படி மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு ரூ.12,160ம், வணிக நிறுவனங்களில் உளள குடிநீர் இணைப்புகளுக்கு ரூ.18,640ம் அபராதம் விதிக்கப்படும். இந்த தொகை செலுத்தப்பட்ட பின்னர் தான் மறு இணைப்பு வழங்கப்படும். மேலும் மேற்படி மின்மோட்டார் பொருத்தி குடிநீர் பிடிப்பவர்களை ஆய்வு செய்ய நகராட்சி பணியாளர்களை கொண்டு 6 குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கூறியுள்ளார்.