உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்; ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2019-06-24 22:30 GMT

சிவகங்கை,

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சிவகங்கையில் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் ரமேஷ், பொருளாளர் விஜய்பாஸ்கர், துணை தலைவர்கள் புஷ்பநாதன், பழனியப்பன், மாநில செயலாளர்கள் பாரி, செல்வகுமார் மாநில தணிக்கையாளர் சார்லஸ் சசிகுமார் உள்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு: தமிழகத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க போதுமான நிதி ஆதாரத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் மத்திய அரசின் நிதி வரவு தற்போது குறைந்துள்ளது. இதுவரை ரூ. 10 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி வரவேண்டும். இது தவிர திட்ட நிதியும் வராமல் உள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு வழங்கப்படும் நிதி குறைவாக உள்ளது. இதனல் பயனாளிகள் கூடுதல் தொகையை போட்டு வீடு கட்ட முடியாமல் தவிக்கின்றனர். எனவே இந்த திட்டத்திற்கு கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அரசு ஊழியர்களுக்கு தரப்படும் நெருக்கடியை குறைக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஊழியர்கள் அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்ற உதவிட வேண்டும். ஓய்வு பெறும் நாளில் பணிநீக்க நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் சென்னையில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் செய்வது. இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்