மானாமதுரையில் முக்கிய பஸ்நிறுத்தங்களை புறக்கணித்து செல்லும் பேருந்துகள்; பயணிகள் அவதி

மானாமதுரையில் அண்ணாசிலை பை–பாஸ் உள்ளிட்ட முக்கிய பஸ்நிறுத்தங்களை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புறக்கணிப்பதால் பயணிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2019-06-24 23:15 GMT

மானாமதுரை,

மானாமதுரை வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. மதுரையில் இருந்து பரமக்குடி, ராமநாதபுரம், ராமேசுவரம், சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி செல்லும் பேருந்துகள் அனைத்தும் மானாமதுரை வழியாக சென்று வருகின்றன. மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியூர் செல்ல மானாமதுரை வழியாக செல்லும் பேருந்துகளை நம்பியே உள்ளனர்.

மானாமதுரையில் தேசிய நெடுஞ்சாலை இருந்த போது அண்ணாசிலை பை–பாஸ் மற்றும் புதிய பஸ்நிலையம் ஆகிய இரு இடங்களில் மட்டும் பேருந்துகள் நின்று செல்வது வழக்கம். தற்போது நான்கு வழிச்சாலையில் அண்ணாசிலை பை–பாஸ் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்ட பின்பு அனைத்து பேருந்துகளும் அண்ணாசிலை பை–பாஸ் வழியாக செல்லாமல் நேரிடையாக பஸ்நிலையத்திற்கு சென்று விடுகின்றன.

இதனால் பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மானாமதுரையில் உள்ள முக்கிய பஸ்நிறுத்தங்களில் நின்று செல்லாமல், நேரடியாக பஸ்நிலையத்தில் பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால் பயணிகள் அங்கு இறங்கி ஆட்டோ மூலம் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு அதிக செலவில் செல்கின்றனர்.

ஒருசில பேருந்துகள் பை–பாஸ் பகுதியில் இறங்க வேண்டிய பயணிகளை தல்லாகுளம் முனீஸ்வரர் ஆலயம் அருகே இறக்கிவிட்டு செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் பெண் பயணிகள் குழந்தைகளுடனும், முதியோரும் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியதாக உள்ளதால் அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதை தடுக்க அனைத்து பேருந்துகளும் பை–பாஸ் நிறுத்தம் வழியாக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுபற்றி போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மானாமதுரையில் நான்கு வழிச்சாலை திறக்கப்பட்ட பின்பு, அண்ணாசிலை பைபாசில் பஸ்நிறுத்தம் இருக்காது என முதலிலேயே தெரிவித்து விட்டோம்.

நான்கு வழிச்சாலையில் ஒருசில இடங்களில் பணிகள் முடியாமல் உள்ளதால், தற்போது பேருந்துகள் அனைத்தும் பாலத்தில் அடியில் சென்று வருகின்றன. பணிகள் நிறைவு பெற்ற பின்பு அண்ணாசிலை பை–பாஸ் ரோட்டில் உள்ள ரெயில்வேகேட் நிரந்தரமாக மூடப்படும், அப்போது பஸ்கள் அனைத்தும் மேம்பாலம் வழியாகத்தான் செல்லும் ஆனால் பைபாஸ் பஸ்நிறுத்தம் இருக்காது என்றனர்.

மேலும் செய்திகள்