காரில் கயிற்றை கட்டி ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை இழுத்துச்சென்ற கொள்ளையர்கள் புனேயில் அதிர்ச்சி சம்பவம்

காரில் கயிற்றை கட்டி ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை இழுத்துச்சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-06-23 23:00 GMT
புனே, 

காரில் கயிற்றை கட்டி ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை இழுத்துச்சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஏ.டி.எம். மையம்

மராட்டிய மாநிலம் புனே, யவாத் பகுதியில் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1.45 மணி அளவில் மர்மநபர்கள் சிலர் வந்தனர். முதலில் அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கருப்பு நிற ஸ்பிரே அடித்து மறைத்தனர்.

பின்னர் தாங்கள் கொண்டுவந்த கயிற்றின் ஒரு முனையில் ஏ.டி.எம். எந்திரத்தை கட்டினர். மற்றொரு முனையை தாங்கள் வந்த காரில் கட்டினர். இதையடுத்து காரை இயங்க வைத்து ஏ.டி.எம். எந்திரத்தை கூண்டோடு பெயர்த்து இழுத்துச்சென்றனர்.

பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை காரில் தூக்கிப்போட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

ரூ.30 லட்சம்

இந்தநிலையில் கொள்ளை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதேபோல் வங்கி அதிகாரிகளும் அங்கு வந்து நிலைமையை பார்வையிட்டனர்.

அடியோடு பெயர்த்து கொள்ளை அடித்து செல்லப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.30 லட்சம் வரை இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தோடு பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்