கம்பம் அருகேயுள்ள மஞ்சள்குளத்தில் விதிகளை மீறி மண் அள்ளுவதை தடுக்க வேண்டும், விவசாயிகள் வலியுறுத்தல்

கம்பம் அருகேயுள்ள மஞ்சள் குளத்தில் விதிகளை மீறி மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2019-06-23 22:15 GMT
கம்பம்,

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்களில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வீரப்பநாயக்கன்குளம், ஒடப்பட்டி, ஒட்டுக்குளம், மஞ்சள்குளம் ஆகிய குளங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளங்களை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் குளங்களில் ஆங்காங்கே மணல் மேடுகளும், செடிகளும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பருவமழை கைகொடுத்தாலும் குளங்களில் முழுமையாக தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் குளங்களுக்கு நீர்வரத்து இல்லாததால் வறண்டு காணப்படுகிறது.

குளங்களை தூர்வாரினால் மழை காலங்களில் அதிகளவு தண்ணீர் தேக்கலாம். எனவே குளங்களை தூர்வாரவேண்டும் என விவசாயிகள் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்களை தூர்வாரி வண்டல் மண்ணை எடுக்க விவசாயிகளுக்கு வருவாய்த்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி குளங்களை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் வண்டல் மண்ணை விவசாயிகள் தங்கள் தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி ஒட்டுக்குளம் மற்றும் மஞ்சள் குளத்தில் வண்டல் மண் அள்ளும் பணி தொடங்கியது. இந்த 2 குளங்களிலும் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்து வந்தன. இதில் ஒட்டுக்குளத்தில் வணிக பயன்பாட்டிற்காக மண் அள்ளப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. அதன்பேரில் ஒட்டுக்குளத்துக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து மண் அள்ள தடை விதித்தனர்.

இதேபோல் மஞ்சள்குளத்தில் விதிகளை மீறி மண் அள்ளுவதற்கு அதிக ஆழமாக்கப்படுவதால் மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கினாலும், அதனை மதகு வழியாக வெளியேற்ற முடியாமல் போய்விடும். மேலும் குளத்தை தூர்வாரும் பணியின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் இல்லாததால் குளத்தில் உள்ள மரங்களை வெட்டி எடுத்து செல்கின்றனர்.

மஞ்சள்குளம் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விதிகளை மீறி மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்