வடகர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை தேவேகவுடா சரிசெய்வாரா? பா.ஜனதா எம்.எல்.ஏ. கேள்வி

வட கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை தேவேகவுடா சரிசெய்வாரா? என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-06-23 22:30 GMT
பெங்களூரு, 

வட கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை தேவேகவுடா சரிசெய்வாரா? என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜனதாவை சேர்ந்த பசன கவுடா பட்டீல் யத்னால் விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தேவேகவுடா ஏமாற்றம்

தேவேகவுடா தனது மகனின் ஆட்சி அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார். 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும், ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவுடன் தனது மகன் முதல்-மந்திரியாக வேண்டும் என்பதே அவரது நோக்கம். நாடாளுமன்ற தேர்தலில் தனது குடும்பத்தினர் தோல்வி அடைந்ததால் தேவேகவுடா ஏமாற்றம் அடைந்துள்ளார்.

வட கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை தேவேகவுடா சரிசெய்வாரா?. அவருக்கு மண்டியா, ஹாசன், ராமநகர் ஆகிய பகுதிகள் மட்டும் வளர்ச்சி அடைந்தால் போதும். மாநிலத்தின் பிற பகுதிகளை பற்றி அவர் கவலைப்படுவது இல்லை. வட கர்நாடகத்திற்கு ரூ.800 கோடியும், மண்டியாவுக்கு ரூ.8,000 கோடியும் ஒதுக்கியுள்ளனர். இது தான் ஜனதா தளம் (எஸ்) கட்சி மாநிலத்தை வளர்ச்சி அடைய செய்யும் திட்டமா?.

பாசன திட்ட பணிகள்

தேவேகவுடாவுக்கு உண்மையிலேயே வட கர்நாடகம் மீது அக்கறை இருந்தால், இந்த பகுதிக்கு ஏற்பட்டுள்ள அநீதியை சரிசெய்ய வேண்டும். எம்.பி.பட்டீல் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தபோது, இந்த பகுதியில் நடைபெற்று வந்த பாசன திட்ட பணிகளும் நின்றுவிட்டன.

ஆலமட்டி அணையின் நீர்தேக்கம் உயரத்தை அதிகரிக்க முதல்-மந்திரி குமாரசாமி, நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் கூறினார்.

மேலும் செய்திகள்