தாயின் உடல் அருகே குழந்தை பரிதவித்த சம்பவத்தில் திருப்பம்: உறவுக்கு மறுத்ததால் இளம்பெண் கொலை போதை ஆசாமி கைது

தாயின் உடல் அருகே குழந்தை பரிதவித்த சம்பவத்தில், அந்த பெண்ணை கொலை செய்ததாக போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். உறவுக்கு மறுத்ததால் அந்த ஆசாமி வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

Update: 2019-06-22 22:30 GMT
தானே,

தாயின் உடல் அருகே குழந்தை பரிதவித்த சம்பவத்தில், அந்த பெண்ணை கொலை செய்ததாக போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். உறவுக்கு மறுத்ததால் அந்த ஆசாமி வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

பெண் கொலை

தானே மாவட்டம் பிவண்டி ராகானல் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் சிந்தாதேவி (வயது23). இவருக்கு திருமணமாகி, 6 மாத குழந்தை உள்ளது. சம்பவத்தன்று காலை சிந்தாதேவியின் கணவர் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் இரவு வீடு திரும்பினார். அப்போது சிந்தாதேவி வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

தாய் இறந்து கிடப்பது தெரியாமல் அவரது குழந்தை உடல் அருகே அமர்ந்து பரிதவித்து கொண்டு இருந்தது. இதை பார்த்து சிந்தாதேவியின் கணவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உறவுக்கு மறுப்பு

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த நிக்கில் (20) என்ற வாலிபர் சிந்தாதேவியை கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சம்பவத்தன்று சிந்தாதேவி 6 மாத குழந்தையுடன் தனியாக வீட்டில் இருந்து உள்ளார். அப்போது நிக்கில் மதுபோதையில் சிந்தாதேவி வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் அந்த ஆசாமி வீட்டில் தனியாக இருந்த பெண்ணுடன் உறவில் ஈடுபட முயன்றுள்ளார். பெண் அதற்கு மறுத்து கூச்சல் போட்டுள்ளார்.

கைது

இதனால் ஆத்திரமடைந்த ஆசாமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குழந்தையின் கண் முன்னே பெண்ணை குத்தி உள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உள்ளார். இதையடுத்து அவர் அங்கு இருந்து தப்பி சென்றுவிட்டார்.

இந்தநிலையில் சிந்தாதேவி உயிரிழந்து இருப்பாரா? என்ற சந்தேகம் நிக்கிலுக்கு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அங்கு சென்ற ஆசாமி சுத்தியலை எடுத்து சிந்தாதேவியை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நிக்கிலை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்