குடிநீர் குழாய் உடைப்புகளை சீரமைக்கும் பணி தீவிரம்

தொண்டி பேரூராட்சி சார்பில் சேதமடைந்த குடிநீர் குழாய் உடைப்புகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-06-22 22:00 GMT
தொண்டி,

தொண்டி-திருவாடானை இடையே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தண்ணீர் வீணாக ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கெல்லாம் சாலையில் பள்ளம் உருவாகி, அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துகளை சந்தித்து வந்தனர். பல மாதங்களாக வீணாக ஓடும் குடிநீர் குழாய்களின் உடைப்பு சரி செய்யப்படாமல் இருந்து வந்தது. இதனால் சாலையின் ஓரத்தில் வீணாக ஓடும் தண்ணீரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தினமும் சேகரித்து வந்தனர்.

மேலும் தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் அதிகஅளவில் இந்த சாலையில் வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் என்பதை உணராமல் கூட தண்ணீரை சேகரிக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுநாள்வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நாளுக்கு நாள் குடிநீர் வீணாகி வருகிறது. பல இடத்தில் தண்ணீர் சாலையில் தேங்கி சுகாதாரக்கேடுகளை விளைவித்து வருவதுடன் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களின் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாகவும் இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை புகைப்படத்துடன் தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மெய்மொழி தலைமையில் அலுவலர்கள் தொண்டி பேரூராட்சிக்கு செல்லும் குடிநீர் வழித்தடங்களை நேரில் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து திருவாடானை தாலுகா கோவணி, பாரூர் கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் மூலம் தொண்டி பேரூராட்சிக்கு குடிநீர் செல்லும் வழித்தடங்களில் தொண்டி-திருவாடானை இடையே தேசிய நெடுஞ்சாலையில் பழையனகோட்டை கிராமத்தில் இருந்த பெரிய அளவிலான குடிநீர் குழாய் உடைப்புகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் பேரூராட்சி பணியாளர்கள் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். மேலும் தொண்டி பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக நடைபெற குடிநீர் குழாய் உடைப்புகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை செயல் அலுவலர் மெய்மொழி, பேரூராட்சி பொறியாளர் மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பணிகளை துரிதமாகவும் தரமாகவும் செய்ய ஆலோசனைகளை வழங்கினர்.

மேலும் செய்திகள்