திருச்செந்தூரில் 19 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: சாலையை தோண்டி குழாய் பதிக்க எதிர்ப்பு அதிகாரிகள் வாக்குவாதம்-பரபரப்பு

திருச்செந்தூரில் சாலையை தோண்டி குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-22 21:30 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூரில் சாலையை தோண்டி குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

திருச்செந்தூரில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அனிதா ராதாகிரு‌‌ஷ்ணன் எம்.எல்.ஏ. நகரப்பஞ்சாயத்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

பொன்னன்குறிச்சி குடிநீர் திட்டத்தில் திருச்செந்தூர் நகரத்திற்கு முழுமையான அளவில் குடிநீர் வராததால் ஆத்தூரில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் குடிநீர் குழாய்களை ஆய்வு செய்தனர். இதில் பல இடங்களில் மெயின் குழாயில் இருந்து குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மெயின் குழாயில் இருந்து ஓட்டல்கள், லாட்ஜ்கள், வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி திருச்செந்தூர் பஸ்நிலைய பகுதியில் உள்ள ஓட்டல்கள், லாட்ஜ்கள், வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள 19 குடிநீர் இணைப்புகளை மெயின் குழாயில் இருந்து நகரப்பஞ்சாயத்து அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவில் துண்டித்தனர்.

அதிகாரிகள் வாக்குவாதம்

இதற்கிடையே திருச்செந்தூர் மாட்டுதாவணியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து காமராஜபுரம் பகுதி வரையிலான வீடுகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க புதிதாக குடிநீர் குழாய் பதித்து வருகின்றனர். இதில் திருச்செந்தூர் பஸ்நிலைய பகுதியில் நிலவள வங்கி முன்பு மெயின்ரோட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை இதற்கான பணி நடந்த போது, அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சிலர் சாலையை தோண்டி குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நகரப்பஞ்சாயத்து அதிகாரிகளுக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த அனிதா ராதாகிரு‌‌ஷ்ணன் எம்.எல்.ஏ. சமாதானம் செய்து வைத்த பின்னர் நகரப்பஞ்சாயத்து அதிகாரிகள் மேற்பார்வையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

மேலும் செய்திகள்