வளநாடு அருகே குடிநீர் வழங்க கோரி, அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

வளநாடு அருகே குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-06-21 22:30 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மருங்காபுரியை அடுத்த வளநாடு அருகே உள்ள அயன்பொருவாய் ஊராட்சி சோலையம்மாபட்டியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கடந்த ஒரு வருடமாக முறையாக வழங்கப்படவில்லை. இதேபோல் 15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் காவிரி குடிநீர் கடந்த 2 மாதங்களாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மக்கள் குறைகேட்க வந்தபோது திருச்சி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக இப்பகுதி பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். உடனடியாக சரி செய்து தந்துவிடுவதாக கூறி சென்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது, குடிக்க கூட நீர் கிடைக்காமல் கிராமமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்ததுடன், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் குளிக்கவும், அவர்களது சீருடைகளை துவைக்கவும் முடியாமல் அவதி அடைந்தனர். காசுகொடுத்து தண்ணீர் வாங்க எண்ணியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தாங்கள் குடிக்கும் உப்பு தண்ணீரைக் பாட்டிலில் கொடுத்து குடித்துப்பார்க்குமாறு கூறினர். அப்போது அதிகாரிகள் உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அத்துடன் ஆழ்துளை கிணறு அமைக்க நீரோட்டம் பார்த்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்