ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

முதுகுளத்தூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.

Update: 2019-06-21 22:37 GMT
முதுகுளத்தூர்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான தீர்வாய கணக்கு தணிக்கை எனும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. முதுகுளத்தூர் வடக்கு உள்வட்டத்திற்கு உட்பட்ட மேலமுதுகுளத்தூர், கீழ முதுகுளத்தூர், புல்வாய்க்குளம், நல்லூர், கீரனூர், மணலூர், ஆணைசேரி ஆகிய 7 வருவாய் கிராமங்களுக்கான தணிக்கை நடைபெற்றது.

முகாமில் வருவாய்த்துறை கணக்கு பதிவேடுகள், பட்டா ஆவணம் வழங்கியது தொடர்பான பதிவேடுகள், அடங்கல், கிராம வரைபடம் உள்ளிட்ட கணக்குகளை சரியான நிலையில் உள்ளனவா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் இந்த தணிக்கையின்போது பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அப்போது ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.

முதியோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்த வள்ளிநாயகம் என்பவருக்கு உடனடியாக மாதந்தோறும் ரூ.1,000 பெறுவதற்கான ஆணையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இதேபோல வேளாண்மை துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் வேளாண் இடுபொருட்கள் மற்றும் அம்மா உயிர் உரம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன், , தாசில்தார்கள் மீனாட்சி, தமீம்ராஜா, சரவணக்குமார் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

25-ந் தேதி மேலக்கொடுமலூர் பிர்காவுக்கும், 26-ந்தேதி தேரிருவேலி பிர்காவுக்கும், 27-ந் தேதி காக்கூர் பிர்காவுக்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நாட்களில் சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து நிவாரணம் பெறலாம்.

மேலும் செய்திகள்