கோத்தகிரியில் ஆய்வு, கிணறுகளை தூர்வார உடனடி நடவடிக்கை - அதிகாரிகளுக்கு, உதவி கலெக்டர் உத்தரவு
கோத்தகிரியில் கிணறுகளை தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆய்வின்போது அதிகாரிகளுக்கு, உதவி கலெக்டர் ரஞ்சித் சிங் உத்தரவிட்டார்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள இடுக்கொரை காலனியில் குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதிலளித்த உதவி கலெக்டர் கூறும்போது, இங்குள்ள நடைபாதை வனத்துறைக்கு சொந்தமான இடத்திலும், தனியார் பட்டா நிலத்திலும் உள்ளது.
எனவே தார்ச்சாலை அமைக்க வனத்துறையிடம் தடையில்லா சான்று பெறப்படும். அதன்பிறகு தனியார் பட்டாதாரரிடம் இருந்து நிலம் பெறப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் என்றார். அதன்பின்னர் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் செலவில் வெட்டப்பட்ட புதிய கிணற்று நீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக அந்த புதிய கிணற்றையும், அதனருகில் உள்ள 2 பழைய கிணறுகளையும் உதவி கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் பழைய கிணறுகளை உடனடியாக தூர்வாரி, அதிலிருந்து சேகரிக்கப்படும் நீரை புதிய கிணற்று நீருக்காக கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டிக்கு கொண்டு வந்து குடியிருப்புகளுக்கு வினியோகிக்க உத்தரவிட்டார். மேலும் பழைய கிணறுகளில் நீர் மாசுபடாமல் இருக்க மேல்மூடி அமைக்கவும் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து அங்கு பழுதடைந்து கிடக்கும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை பார்வையிட்டு, சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் ரைபிள் ரேஞ்சு பகுதியில் நீராதாரங்களை பாதுகாப்பது குறித்து லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவினருடன் உதவி கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு கோத்தகிரி நகருக்கு குடிநீர் வழங்கும் 3 கிணறுகளையும், பயனில்லாமல் கிடக்கும் பிற கிணறுகளையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து பயனில்லாமல் கிடக்கும் கிணறுகளை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது தாசில்தார் சங்கீதா ராணி, செயல் அலுவலர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.