மழை வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க முடியும் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
மழை வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க முடியும் என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,
மழை வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க முடியும் என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக் குமார் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திற்கு காவிரிநீர்
காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள அணைகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2018) இதே நாளில் கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணையில் 48 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் இருப்பு இருந்தது. ஆனால் இந்த முறை நீர் குறைவாக உள்ளது. அதனால் மழை வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிட முடியும்.
வருண பகவான் தான் நம்மை காப்பாற்ற வேண்டும். மழை வந்து, அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. மராட்டிய மாநில அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுவது குறித்து மராட்டிய மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதற்காக புதிய ஒப்பந்தம் போடப்படும்.
விவரங்களை திரட்டுகிறேன்
நாளை (அதாவது இன்று) கர்நாடகம்-மராட்டிய மாநில எல்லையில் அமைந்துள்ள அணைகளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். அங்கு நிலவும் சூழ்நிலையை பரிசீலிக்கிறேன். அந்த பகுதியில் எவ்வளவு நீர் தேவைப் படுகிறது, தண்ணீர் பிரச்சினை உள்ள இடங்கள் குறித்து முழு விவரங்களை திரட்டுகிறேன்.
அதன் பிறகு முதல்-மந்திரி குமாரசாமியை நேரில் சந்தித்து, இதுபற்றி ஆலோசனை நடத்தப்படும். பின்னர் மராட்டிய மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். இலகல் அணையில் இருந்து மராட்டிய மாநிலத்திற்கு 2 டி.எம்.சி. நீரை திறந்து விட்டுள்ளோம்.
கட்டணம் நிர்ணயம்
இந்த நீர் மராட்டிய மாநிலத்தை சென்றடையவில்லை என்ற தகவல் உள்ளது. ஆனால் திறந்துவிடப்பட்ட அந்த நீர் எங்கே சென்றது. இதுபற்றி விவாதிக்கப்படும். மராட்டிய மாநில அரசு தண்ணீரை திறந்துவிட்டபோது, அதற்கு கட்டணம் நிர்ணயம் செய்து வழங்கினோம். இப்போது மராட்டிய அரசு தண்ணீருக்கு தண்ணீரே கொடுங்கள் என்று கேட்கிறது. இதற்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்.
இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.