ஓசூர் அருகே நாய்கள் கடித்ததில் மான் சாவு தண்ணீர் தேடி வந்தபோது பரிதாபம்
ஓசூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தபோது நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாபமாக செத்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரிகை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள வனப்பகுதியில் மான்கள் அதிகளவில் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் அவைகள் அடிக்கடி இரை மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விடுகின்றன. அவ்வாறு வரும் மான்கள் சாலையை கடக்கும் போது வாகனங்கள் மோதி இறக்கும் சம்பவங்களும், தெருநாய்கள் கடித்து இறக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்தநிலையில் ஓசூர் அருகே பேரிகை அடுத்த மிடுதேபள்ளி வனப்பகுதியில் இருந்து பிறந்து 6 மாதங்களே ஆன குட்டி பெண் மான் ஒன்று, நேற்று தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தது. இதையொட்டி அந்த மான் பேரிகை கிராமத்திற்குள் புகுந்தது. மானை பார்த்ததும் அங்கு நின்ற தெருநாய்கள் கூட்டம் அந்த மானை கடிக்க துரத்தியது.
இதனால் பயந்து போன மான் நாய்களிடம் இருந்து தப்பிக்க தலைதெறிக்க ஓடியது. இருப்பினும் விடாமல் துரத்திய தெருநாய்கள் அதனை விரட்டி பிடித்து கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மானை மீட்டனர். பின்னர் மானின் உடலை அருகில் உள்ள ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் புதைத்தனர்.
தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் மான்கள் வருவதை தடுக்க வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தினமும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.