ஆத்தூரில் பிடிபட்ட கும்பல்: பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது எப்படி? கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து ஆத்தூரில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பண இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ஒரு கும்பல் மோசடி செய்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவகங்கையை சேர்ந்த அருண்குமார் (வயது 24), திருச்சியை சேர்ந்த சதீஷ்குமார் (36), தூத்துக்குடியை சேர்ந்த பிரதீப் (42), புத்திர கவுண்டன் பாளையத்தை சேர்ந்த மேனகா (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 2 கார்கள், ரூ.6 லட்சத்து 10 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கைதான மோசடி கும்பல் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
நாங்கள் ஒரு மாவட்டத்துக்கு வந்தால், அங்கு ஒரு நகரில் லாட்ஜில் அறை எடுத்து சில நாட்கள் தங்குவோம். அப்போது கள்ளத்தனமாக லாட்டரி சீட்டு வாங்குபவர்கள், சூதாடுபவர்கள் மற்றும் வெகுவிரைவில் பணக்காரர்களாக ஆசைப்படுபவர்கள் ஆகியோரை தேர்வு செய்வோம்.
பின்னர் அவர்களிடம் நட்பாக பழகி முதலில் ரூ.10 ஆயிரம் கொடுங்கள், 15 நாளில் ரூ.20 ஆயிரம் தருகிறோம் என்றும், ரூ.25 ஆயிரம் கொடுங்கள் 15 நாளில் ரூ.50 ஆயிரம் தருகிறோம் என ஆசைவார்த்தை கூறுவோம். அதன்படி அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு திரும்ப கொடுப்போம்.
அவர்களை நம்ப வைத்து, அதன் பிறகு ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் என வாங்குவோம். சிலர் வீட்டில் உள்ள பொருட்கள், நகைகளை அடகு வைத்தும், சொத்துக்களை விற்றும் எங்களிடம் பணம் கொடுத்துள்ளனர். அதை பெற்றுக்கொண்டு நாங்கள் அந்த மாவட்டத்தை விட்டு, வேறு மாவட்டத்துக்கு சென்று விடுவோம்.
அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். நினைத்த உணவுகளை வாங்கி சாப்பிட்டு மகிழ்வோம். இந்த நிலையில் ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் பண இரட்டிப்பு மோசடி செய்வதற்காக ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அந்த நபர் எங்களை போலீசில் சிக்க வைத்துவிட்டார். இதனால் மாட்டிக்கொண்டோம்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து பிடிபட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.