ஊரக வேலை திட்ட பொறுப்பாளர் மாற்றம், பழனி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஊரக வேலை திட்ட பொறுப்பாளர் மாற்றப்பட்டதை கண்டித்து பழனி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

Update: 2019-06-20 22:45 GMT
பழனி,

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி அருகேயுள்ள பெரியம்மாபட்டி ஊராட்சி சின்னக்காந்திபுரத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென ஒன்றிய அலுவலகத்தின் வாசல் முன்பு அமர்ந்தனர்.

மேலும், தங்கள் பகுதியின் ஊரக வேலை திட்ட பொறுப்பாளரை மாற்றம் செய்ததை கண்டித்து முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை அங்கு வந்தார். பின்னர் அவரிடம், பொதுமக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பெரியம்மாபட்டி ஊராட்சி சின்னக்காந்திபுரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி செய்து வருகிறோம். இங்கு திட்ட பொறுப்பாளராக இருந்த ரங்கநாதன் முயற்சியால் பணிகள் நல்ல முறையில் நடைபெற்றன. இந்த நிலையில் அவர் திடீரென்று மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வந்தவர் எங்களுக்கு முறையாக வேலை வழங்கவில்லை. எனவே அவரை நீக்க வேண்டும்.

மேலும் எங்கள் பகுதியிலுள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. இந்திரா நகர், குமணம்பாறை சாலை ஆகிய இடங்களில் பொருத்தப்பட்ட மின்மோட்டார்கள் என்ன ஆனதென்றே தெரியவில்லை. இதனால் நாங்கள் குடிநீரின்றி தவித்து வருகிறோம். இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நெய்க்காரப்பட்டியில் சாலைமறியல் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்