போளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை ரூ.60 ஆயிரம் பறிமுதல்

போளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ரூ.60 ஆயிரத்து 810 பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-06-20 22:00 GMT
போளூர், 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும் அதனை பதிவு செய்ய வருபவர்களிடம் ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை லஞ்சமாக கேட்பதாக பொதுமக்கள் தரப்பில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. எனவே பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரகாஷ், ரஜினிகாந்த் உள்ளிட்ட 10 போலீசார் நேற்று மாலை 6 மணியளவில் போளூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அவர்கள் சார்பதிவாளர் சாந்தகுமாரி மற்றும் அலுவலக ஊழியர்கள், பத்திர எழுத்தர்கள் உள்ளிட்டவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்து 810 பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக சார்பதிவாளர் அலுவலகம் உள்ள தாலுகா அலுவலக பகுதி பரபரப்பானது. இரவு 8 மணிக்கு மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கிருந்த பொதுமக்களிடமும் விசாரணை நடந்தது.

ஏற்கனவே இது போன்ற திடீர் சோதனைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, வந்தவாசி, வேட்டவலத்தில் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்