விழுப்புரம் அருகே, டிப்பர் லாரி மோதி பாட்டி- பேத்தி பலி - தொடர் விபத்தை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம் அருகே டிப்பர் லாரி மோதியதில் பாட்டி- பேத்தி பலியாகினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொடர் விபத்தை தடுக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-20 23:15 GMT
வளவனூர், 

விழுப்புரம் அருகே உள்ள ஏ.கே.குச்சிப்பாளையத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் மகன் குணராஜ் (வயது 27), கூலித்தொழிலாளி. இவருடைய தாய் பழனியம்மாளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இவரை பார்த்து நலம் விசாரிக்க அவரது அக்காவான புருஷானூரை சேர்ந்த நாராயணசாமி மனைவி நாகம்மாள் (55) முடிவு செய்தார். இதற்காக நாகம்மாள் நேற்று காலை தனது தங்கை பழனியம்மாளின் மகன் குணராஜை செல்போனில் தொடர்பு கொண்டு உன்னுடைய தாயை பார்க்க வேண்டும் என்பதால் புருஷானூருக்கு வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச்செல்லும்படி கூறியுள்ளார்.

அதன்படி குணராஜ் தனது மோட்டார் சைக்கிளில் ஏ.கே.குச்சிப்பாளையத்தில் இருந்து புருஷானூருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் தனது பெரியம்மா நாகம்மாளை அழைத்துக்கொண்டு ஏ.கே.குச்சிப்பாளையத்திற்கு புறப்பட்டார். நாகம்மாள் தனது மகன் வழி பேத்தியான நந்தினியை (4) உடன் அழைத்துச்சென்றார். குணராஜ், மோட்டார் சைக்கிள் ஓட்ட அவரது பின்னால் நாகம்மாள் தனது பேத்தியை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தார்.

இவர்கள் காலை 7.30 மணியளவில் விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள ஒரு சிறு பாலத்தை கடந்து செல்லும்போது திடீரென இவர்களது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையின் இடதுபுறமாக குணராஜ் விழுந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நாகம்மாள் தனது பேத்தியுடன் சாலையின் வலதுபுறமாக நடுரோட்டில் தவறி விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் கோலியனூரில் இருந்து பண்ருட்டி நோக்கி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் நாகம்மாள், அவரது பேத்தி நந்தினி மீது மோதியது. இதில் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதையறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். உடனே விபத்தை ஏற்படுத்திய டிரைவர், டிப்பர் லாரியை வேகமாக ஓட்டிச்சென்றார். அந்த டிப்பர் லாரியை இளைஞர்கள் சிலர் தங்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து துரத்திச்சென்றனர். மாளிகைமேடு அருகில் டிப்பர் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் கீழே இறங்கி தப்பிச்சென்று விட்டார்.

இதனிடையே ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் காலை 7.45 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் பல இடங்களில் உள்ள பள்ளங்களால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருவதாகவும், விபத்தை தடுக்கும் வகையில் சாலையை சீரமைக்கக்கோரியும், விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவரை உடனே கைது செய்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிடவில்லை.

இதையடுத்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி தொடர் விபத்துகளை தடுக்கவும், விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவரை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் காலை 8.30 மணியளவில் மறியலை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. தொடர்ந்து, விபத்தில் பலியான நாகம்மாள், நந்தினி ஆகியோரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஒடிய டிப்பர் லாரி டிரைவர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த ஜெயராஜ்(38) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்