மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் பெற 4-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் பெற வருகிற ஜூலை 4-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் மொத்த தொகையில் 50 சதவீதம், இவை இரண்டில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 31 ஆயிரத்து 250 வழங்கப்படும்.
125 சிசிக்கு குறைவான கியர்லெஸ் வாகனத்தை பயனாளிகள் தங்களது சொந்த நிதியில் இருந்தோ, வங்கி கடன் அல்லது கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்தோ கடன் பெற்று வாங்கலாம். மானியம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இந்த மானியம் பெற, பயனாளிகள் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் போது, இருசக்கர வாகன ஓட்டுனர், பழகுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பயனாளிகள் 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளி மட்டும் தகுதியுடைவர் ஆவர். அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், சுயமாக சிறுதொழில் செய்யும் பெண்கள். அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சமூக அடிப்படை நிறுவனங்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மாவட்ட மக்கள் கற்றல் மையம் ஆகிய நிறுவனங்களில் தொகுப்பூதியம், தினக்கூலி அல்லது ஒப்பந்த ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் மகளிர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் இதில் பயன்பெறலாம்.வேலை செய்யும் மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் பெண்கள், பெண்களை குடும்பத்தலைவராக கொண்ட குடும்பங்களில் உள்ள பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளி பெண்கள், 35 வயதிற்கு மேல் உள்ள திருமணமாகாத பெண்கள், எஸ்.சி., எஸ்.டி மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எஸ்.சி பெண்களுக்கு 21 சதவீதமும், எஸ்.டி பெண்களுக்கு ஒரு சதவீதமும், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு 4 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து வருகிற ஜூலை 4-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.