பாலின சமத்துவத்தை கற்பிக்கும் வகையில் 2-ம் வகுப்பு பாட புத்தகங்கள் திருத்தப்பட்டன

பாலின சமத்துவத்தை கற்பிக்கும் வகையில் 2-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளன.

Update: 2019-06-19 22:52 GMT
மும்பை,

பாலின சமத்துவத்தை கற்பிக்கும் வகையில் 2-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளன.

பாடப்புத்தகத்தில் பாலின பாகுபாடு

பள்ளி பாடங்களில் பாலின பாகுபாடுகள் நிறைந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. பல தலைமுறை மாணவர்கள் குடும்ப தலைவி வீட்டு வேலைகள் செய்வது, குழந்தைகளை பராமரிப்பது போன்றும், குடும்ப தலைவர் தனக்கே உரிய கவுரவத்துடன் பத்திரிகை செய்தி வாசிப்பது போன்றும் பாலின பாகுபாட்டை காட்டும் வகையில் படங்கள் இடம் பெற்றிருப்பதை பார்த்து படித்து வந்தனர்.

போலீஸ்காரர், வக்கீல், டாக்டர், தையல்காரர், பால்காரர், விமானி, டிரைவர் உள்பட அனைத்து பணி தொடர்பான விளக்க படங்களிலும் ஆண்களின் படமே இடம் பெற்றிருக்கும்.

திருத்தி அமைப்பு

இந்தநிலையில், தற்போதைய சமூக மாற்றத்திற்கு ஏற்றார் போல் மாணவர்களிடம் பாலின சமத்துவத்தை கற்பிக்கும் வகையில், மராட்டியத்தில் 2-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை மாநில பாடநூல் உற்பத்தி மற்றும் பாடத்திட்ட ஆராய்ச்சி முகமையான பாலபாரதி திருத்தி அமைத்து உள்ளது.

இதன்படி பெண்கள் அதிக முன்னேற்றம் அடைந்தவர்களாக சித்தரிக்கப்பட்டு உள்ளனர். பாடப்புத்தகத்தின் ஒரு பக்கத்தில் ஆண், பெண் இருவரும் அருகருகே சமமாக அமர்ந்து காய்கறிகளை கழுவி சுத்தம் செய்வது போல் படம் இடம் பெற்று இருக்கிறது.

அதே பக்கத்தில் ஆண் ஒருவர் சமையல் வேலை செய்யும் படமும், மற்றொரு படத்தில் மற்றொரு ஆண் துணிகளை இஸ்திரி செய்வது போன்ற படமும் இடம் பெற்று உள்ளது.

வரவேற்பு

பெண் ஒருவர் டாக்டராகவும், வேறொன்றில் சாலை போக்குவரத்தினை சீர் செய்யும் போக்குவரத்து காவலாளியாகவும் காட்டப்பட்டு உள்ளார். பாடப்புத்தகத்தில் இடம் பெற்று உள்ள பாலின சமத்துவம் பற்றிய இந்த படங்களை கவனித்து ஒரு சில வரிகளை மாணவர்கள் கூறும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

ஆண் மற்றும் பெண் சமம். அவர்கள் இருவராலும் எந்த வேலையையும் செய்ய முடியும் என்ற சிந்தனையை மாணவர்களிடம் ஏற்படுத்தவே பாடப் புத்தகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன என பாலபாரதி இயக்குனர் சுனில் மகர் தெரிவித்து உள்ளார்.

பாலின சமத்துவத்தை ஊக்கப்படுத்தும் வகையில் 2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தை திருத்தி அமைத்து உள்ளதற்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்