தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தினக்கூலிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-06-19 22:30 GMT
காரைக்கால்,

காரை பிரதேச கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் நல சங்க பொதுக்குழு கூட்டம், சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது. செயலாளர் சகாயராஜ் வரவேற்றார். சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் ஜெய்சிங், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், அலுவலக செயலாளர் புகழேந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சங்க துணை செயலாளர் மகேந்திரன், ஒருங்கிணைப்பாளர் திருமேனி உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் முருகபூபதி நன்றி கூறினார்.

கூட்டத்தில், கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சி நிர்வாகம் இருந்தபோது புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 98 கிராம பஞ்சாயத்துகளுக்கு 196 தினக்கூலி கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக கொம்யூன் பஞ்சாயத்துகளில் வரி வசூல், நீர் தேக்க தொட்டி இயக்குதல், வாகனம் ஓட்டுதல், குடிநீர் குழாய் பழுது நீக்குதல், இரவு காவலர், திருமண மண்டப காப்பாளர், மின் சம்பந்தமான பணிகள் மற்றும் அலுவலகத்தில் எழுத்து பணிகளை செய்து வருகிறார்கள்.

இந்த கிராம பஞ்சாயத்து ஊழியர்களின் வயதையும், குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக முதல்-அமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர், உள்ளாட்சித்துறை அரசு செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோர்களிடத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், கிராம பஞ்சாயத்து ஊழியர்களின் கோரிக்கையினை ஏற்று கடந்த ஆண்டு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த முயற்சியும் நடைபெற்றதாக தெரியவில்லை. எனவே, புதுச்சேரி அரசும், உள்ளாட்சித்துறையும் தினக்கூலி கிராம பஞ்சாயத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்