ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பொதுமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க ஏற்பாடு

ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-06-19 22:15 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் நகரில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை எவ்வாறு சரி செய்வது என பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் ராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.கூட்டத்தில் பொதுமக்கள், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள், தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் நிர்வாகிகள், முகநூல் நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது இடர்பாடுகளையும் கருத்துகளையும் கூறினர். பொதுமக்களின் சந்தேகங்களுக்கு துறை சார்ந்த அதிகரிகள் விளக்கமளித்தனர்.கூட்டத்தில் தங்கப்பாண்டியன் பேசுகையில் கூறியதாவது:-

போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பொதுமக்களின் இடர்பாடுகளை போக்க சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பான பிரச்சினைகளை கேட்டு அறிய தனித்தனியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு செல்போன் வழங்கப்பட்டுள்ளது.அதில் தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ் அப்பில் புகைப்படத்துடன் தகவல் அளித்தாலோ அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் கொண்டு சென்று 24 மணி நேரத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ராஜபாளையம் தொகுதிக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கவும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவும், மின் மயானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இணைப்பு சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறினார்.

கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பொன்முரளி, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட உதவிபொறியாளர் கற்பகம் ரவீந்திரன், பாதாள சாக்கடை திட்ட உதவி பொறியாளர் மோகெல் வைகில் ராஜா தனி தாசில்தார் ராம்தாஸ், நகராட்சி அலுவலர் காந்தி, தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதே போன்று ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் வியாபாரிகள், தொழில் வர்த்தகர்கள், காவல் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மற்றம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பார்த்தீபன், சங்கர்கண்ணன். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அவர்கள் தெரிவித்ததாவது:-

ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் பஞ்சு மார்க்கெட் பகுதியில் நடைமுறையில் இருந்து வந்த ஒருவழிப்பாதை மாற்றம் செய்யப்பட்டு அனைத்து கனரக வாகனங்களும் நகர் பகுதிக்குள் வந்து செல்கின்றன.

இந்த நிலையில் நகர் பகுதியில் இயங்கி வரும் கடைகள், வியாபார நிறுவனங்கள், காய்கறி அங்காடிகள் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு சரக்குகளை ஏற்றி, இறக்க பகல் நேரத்தில் லாரிகள் சாலையில் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மேம்பால பணிகள் முடியும் வரை சரக்குகளை இரவு நேரத்தில் ஏற்றி,இறக்கினால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. வியாபாரிகள் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு கூறினர்.இதற்கு வியாபரிகள் தரப்பில், நகர் பகுதிகளில் உள்ள அனைத்து வியாபாரிகளிடமும் இதுகுறித்து கலந்து ஆலோசித்து கருத்தை தெரிவிப்பதாக கூறினர்.

மேலும் செய்திகள்