ஓசூரில் தனியார் மருத்துவமனை மேலாளர் வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை
ஓசூரில் தனியார் மருத்துவமனை மேலாளர் வீட்டில் 18 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டபள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வினோத் குமார்(வயது 30). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வினோத் குமார், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான விருதுநகருக்கு சென்றார்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க செயின்கள், வளையல், பிரேஸ்லெட், கம்மல் என மொத்தம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓடி விட்டனர்.
இந்தநிலையில் வீட்டிற்கு வந்த வினோத் குமார், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.