தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.46 லட்சம் கொள்ளை: சேலம் சிறை வார்டன் உள்பட 150 பேரிடம் போலீசார் விசாரணை
பொம்மிடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.46 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சேலம் சிறை வார்டன் உள்பட 150 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்மநபர்கள் புகுந்து ரூ.46 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போது சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணிபுரியும் ஒருவர் உள்பட பலருக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி தனிப்படை போலீசார் அந்த வார்டனை தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த கொள்ளை சம்பவம் நடந்த தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த 2 ஊழியர்கள் மற்றும் சேலத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்களில் 2 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
தற்போது வேறு ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் பிரபல கொள்ளையனையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதுதொடர்பாக பொம்மிடி போலீசார் கூறுகையில், பொம்மிடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் 150 பேரிடம் புலன் விசாரணை நடத்தி வருகிறோம்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படுபவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விட்டோம். அவர்களுக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ள தொடர்பு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.