வனக்காவலர் கொலை வழக்கில் பிடிபட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வனக்காவலர் கொலை வழக்கில் பிடிபட்ட 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
திண்டுக்கல்,
கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). இவர், சிறுமலை வனச்சரகத்தில் வனக்காவலராக பணி புரிந்து வந்தார். சிறுமலை அடிவாரத்தில் மாவூர் அணை அருகே இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த 6-ந்தேதி அந்த தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் அருகில் 6 பேர் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் அவர்களை தட்டிக்கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த 6 பேரும் சேர்ந்து மதுபான பாட்டிலை உடைத்து அவரை சரமாரியாக குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், ராஜேந்திரனை கொலை செய்தது நிலக்கோட்டையை அடுத்த ஆவாரம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி (27), மருதுபாண்டி (28), சேதுபதி, ஆனந்தன், நாச்சியப்பன், சோனைமுத்து ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து திண்டுக்கல் கிளை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கைதான 6 பேர் மீதும் கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார். இதையடுத்து அம்மையநாயக்கனூர் போலீசார் பால்பாண்டி உள்பட 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.