பெரியகுளம் நகராட்சியில் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ததில் முறைகேடு கலெக்டரிடம், துப்புரவு தொழிலாளர்கள் புகார்
பெரியகுளம் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக கலெக்டரிடம் துப்புரவு தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பிச்சைமுத்து தலைமையில் துப்புரவு தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.
அவர்கள், கலெக்டர் பல்லவி பல்தேவிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.
அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெரியகுளம் நகராட்சியில் ஒப்பந்த முறையில் 63 துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.330 சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.43 வீதம் ஒரு மாதத்துக்கு ரூ.1,290 சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு பிடித்தம் செய்த தொகை முழுவதையும் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தாமல் பாதி தொகையை மட்டுமே செலுத்தி உள்ளனர். அதாவது, ரூ.1290 கட்டுவதற்கு பதில் ரூ.721 மட்டுமே கட்டியுள்ளனர்.
இதனால் ஒப்பந்த பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு பிடித்தம் செய்த பாதி பணம் முறைகேடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.