காவேரிப்பட்டணத்தில் மளிகை கடைக்காரர் வங்கி கணக்கில் இருந்து ரூ.78 ஆயிரம் அபேஸ் மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
காவேரிப்பட்டணத்தில் மளிகை கடைக் காரர் வங்கி கணக்கில் இருந்து ரூ.78 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம், அகரம் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு ஒருவர் பேசியுள்ளார். அப்போது அவர் நான் வங்கி மேலாளர் பேசுகிறேன். உங்கள் ஏ.டி.எம் கார்டு லாக் ஆகிவிட்டது. அதை சரிசெய்ய வேண்டும் என கூறி, ஏ.டி.எம் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய நாகராஜ் அனைத்து விவரங்களையும் அந்த மர்ம ஆசாமியிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 78 ஆயிரத்து 489 எடுத்து விட்டதாக நாகராஜின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து வங்கிக்கு சென்று கேட்டுள்ளார். அதுபோல் நாங்கள் யாரும் பேசவில்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜ் அவருக்கு வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு மீண்டும் பேசியுள்ளார். அப்போது எதிரில் பேசிய அந்த மர்ம ஆசாமி, நாகராஜை மிரட்டியதுடன், ஆபாச வார்த்தையால் திட்டியுள்ளார். இது குறித்து நாகராஜ் நேற்று காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து மளிகை கடைக்காரர் வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்.