மாநகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்பட்ட, குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாக பொதுமக்கள் புகார்
வேலூரில் நேற்று மாநகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களுக்கு குடிநீ்ர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த வாரம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
வேலூர் கஸ்பா பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், நேற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள் தண்ணீர் பிடிப்பதற்காக குடங்களுடன் சென்றனர்.
குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்த போது அதில் துர்நாற்றம் வீசி உள்ளது. பாட்டிலில் தண்ணீரை பிடித்து பார்த்துள்ளனர். அப்போது குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் மாநகராட்சி சார்பில் சீரான குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதனால் காசுக்கொடுத்து குடிநீர் வாங்கி வருகிறோம். இந்த நிலையில் இன்று (நேற்று) மாநகராட்சி வினியோகம் செய்த குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதை குடித்தால் நோய் ஏற்படும். எனவே தூய்மையான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.