பொதுமக்களுக்கு, சீராக குடிநீர் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
பொதுமக்களுக்கு சீராக குடிநீர் கிடைத்திடும் வகையில் அரசு அதிகாரிகள் பணியாற்றிட வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா அறிவுறுத்தினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளருமான தயானந்த் கட்டாரியா அனைத்துத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், மின்சார வாரிய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பொதுமக்களுக்கு சீராக குடிநீர் கிடைத்திடும் வகையில் நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் எனவும், குடிநீர் குழாய்கள் உடைப்பு மற்றும் புதிய குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்களிடம் இருந்து வருகிற கோரிக்கைகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட 15 ஊராட்சி ஒன்றியங்களிலும் ரூ.33 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிணறுகள் அமைத்தல், கிணறுகளை ஆழப்படுத்துதல், புதிய ஆழ்குழாய் கிணறுகளை அமைத்தல், ஆழ்குழாய் கிணறுகளை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட 1,245 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் தற்போது 810 பணிகள் முடிவடைந்து உள்ளன. மீதமுள்ள 435 பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
நாமக்கல் நகராட்சியில் புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 9 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 4 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளன. மொத்த திட்டப்பணியில் 58 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன. மீதமுள்ள பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. வருகிற டிசம்பர் மாதம் பணிகள் முடிவடைந்த பின்னர் நாமக்கல் நகராட்சி பகுதியில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், இணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) பாலமுருகன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஹசீனாபேகம் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக தயானந்த் கட்டாரியா, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியமணலி ஊராட்சி பழக்காடு பகுதியில் மாநில நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணி, எலச்சிபாளையம் பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டு வரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டார்.