ஓமன் நாட்டில், குமரி மெக்கானிக் அடித்துக்கொலை - போலீஸ் விசாரணை
குமரி மாவட்டத்தை சேர்ந்த மெக்கானிக் ஓமன் நாட்டில் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஓமன் நாட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவட்டார்,
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே மாத்தூர், செஞ்சரிவிளையை சேர்ந்தவர் பாபு (வயது 32), ஏ.சி. மெக்கானிக். இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஓமன் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாபு, தனது விசா காலம் முடிந்ததால் விரைவில் வீட்டுக்கு வருவதாக தாயார் ரங்கபாயிடம் கூறியுள்ளார். அதன்படி, பாபுவின் வருகையை உறவினர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் ஓமனில் இருந்து உறவினர்களுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ஓமனில் பாபு கொலை செய்யப்பட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாபுவின் தாயார் ரங்கபாய் ஓமன் நாட்டில் உள்ள உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்து, தனது மகன் குறித்து விசாரிக்கும்படி கூறினார்.
இதையடுத்து ஓமனில் இருந்த உறவினர், பாபு தங்கியிருந்த அறைக்கு சென்ற போது, அவர் கொலை செய்யப்பட்டு அருகில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து உறவினர் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. பாபு தங்கியிருந்த அறையில் அவருடன் வடமாநிலத்தை சேர்ந்த வேறு இரண்டு பேர் தங்கியிருந்தனர். மேலும், பாபு தனது சம்பள தொகையில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு மீதி பணத்தை கையில் வைத்திருந்தார். தற்போது வீட்டுக்கு புறப்பட்டு வர இருந்த நிலையில், அவருடன் அதிக அளவு பணம் இருந்துள்ளது. இதனால், பணத்துக்கு ஆசைப்பட்டு அவருடன் தங்கியிருந்த 2 பேர் பாபுவை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்ததும் குமரியில் உள்ள உறவினர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர். இதுகுறித்து ஓமன் நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே பாபுவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், பாபுவை கொலை செய்தவர்களை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.