ஜனதா தளம் (எஸ்) தலைவர் பதவியில் நீடிக்க எச்.விஸ்வநாத் மறுப்பு நேரில் அழைத்து பேசிய தேவேகவுடாவின் முயற்சி தோல்வி
ஜனதா தளம் (எஸ்) தலைவர் பதவியில் நீடிக்க எச்.விஸ்வநாத் மறுத்துவிட்டார். இதனால் நேரில் அழைத்து பேசிய தேவேகவுடாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
பெங்களூரு,
ஜனதா தளம் (எஸ்) தலைவர் பதவியில் நீடிக்க எச்.விஸ்வநாத் மறுத்துவிட்டார். இதனால் நேரில் அழைத்து பேசிய தேவேகவுடாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
கடும் விமர்சனம்
ஜனதா தளம் (எஸ்) தலைவராக இருப்பவர் எச்.விஸ்வநாத். அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதற்கான கடிதத்தை கட்சி அலுவலகத்தில் கொடுத்தார்.
ஆனால் கர்நாடக கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் தன்னை சேர்க்க வேண்டும் என்று எச்.விஸ்வநாத் வலியுறுத்தினார். ஆனால் சித்தராமையா அவரை சேர்க்கவில்லை. இதனால் சித்தராமையா மீது அவர் கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
கூட்டணியில் குழப்பம்
இதனால் கர்நாடக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. எச்.விஸ்வநாத்தின் விமர்சனத்திற்கு சித்தராமையா பதிலளிக்கவில்லை. மேலும் கட்சியில் தனது பேச்சுக்கு மதிப்பு இல்லை என்றும் எச்.விஸ்வநாத், ராஜினாமா செய்வதற்கு முன்பு பகிரங்கமாக கூறினார்.
இந்த நிலையில், கட்சி தலைவர் பதவியில் நீடிக்குமாறு அவருக்கு தேவேகவுடா மற்றும் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அந்த வேண்டுகோளை ஏற்க எச்.விஸ்வநாத் மறுத்துவிட்டார்.
பதவியில் நீடிக்க மாட்டேன்
இந்த நிலையில் எச்.விஸ்வநாத்தை தேவேகவுடா நேரில் அழைத்து பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று பேசினார். அப்போது, தேவேகவுடா, ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்று, கட்சி பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் இதை ஏற்க எச்.விஸ்வநாத் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எக்காரணம் கொண்டும், தலைவர் பதவியில் நீடிக்க மாட்டேன் என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புறப்பட்டு ெசன்றார்
சில நாட்களுக்கு பிறகு மீண்டும் கூடி ஆலோசனை நடத்துவோம் என்று தேவேகவுடா கூறியுள்ளார் என்று தெரிகிறது. அதனால் எச்.விஸ்வநாத் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின்போது மந்திரிகள் சா.ரா.மகேஷ், ஜி.டி.தேவேகவுடா ஆகியோரும் உடன் இருந்தனர்.