தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணைய அதிகாரி 12-வது கட்ட விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணைய அதிகாரி நேற்று 12-வது கட்ட விசாரணையை தொடங்கினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணைய அதிகாரி நேற்று 12-வது கட்ட விசாரணையை தொடங்கினார்.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள்.
இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்த ஆணையத்தின் விசாரணை அதிகாரியான அருணா ஜெகதீசன் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே 11 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, 329 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
12-வது கட்ட விசாரணை
இந்த நிலையில் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் 12-வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. இதில், போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் போலீசார் பதிவு செய்த வழக்குகளின் புகார்தாரர்களிடம் விசாரணை நடத்துவதற்காக மொத்தம் 42 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதில் நேற்று மட்டும் ஆஜராகுமாறு 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவர்களில் 3 பேர் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. வருகிற 21-ந்தேதி வரை இந்த விசாரணை தொடர்ந்து நடக்கிறது.