குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலஅளவீடு பணிகள் தொடக்கம்
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலஅளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலஅளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
ராக்கெட் ஏவுதளம்
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் முயற்சியால் ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியா சர்வதேச அளவில் முன்னோடியாக திகழ்கிறது. இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் 2 ஏவுதளங்கள் இருக்கின்றன. இந்த துறையில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருப்பதால், 3-வது தளம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் 3-வது தளத்தை அமைப்பதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. இதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானி நாராயணா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், பல்வேறு மாநிலங்களிலும் பொருத்தமான இடத்தை தேடினார்கள். அப்போது புதிய ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது.
நிலஅளவீடு பணிகள் தொடக்கம்
இதையடுத்து குலசேகரன்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. குலசேகரன்பட்டினம், கூடல்நகர் அமராபுரம் பகுதிகளில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது.
இதற்காக திருச்செந்தூர் தாசில்தார் தில்லைபாண்டி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என வருவாய்த்துறையினர் அப்பகுதிகளில் நிலஅளவீடு மற்றும் மரங்கள் கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர். பொதுப்பணித்துறை நிலமதிப்பீடு பணி முடிந்த பிறகு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.