கர்நாடகத்தின் நலனை காக்க காவிரி பிரச்சினையில் அனைவரும் கூட்டாக போராட வேண்டும் நடிகை சுமலதா எம்.பி. பேட்டி

கர்நாடகத்தின் நலனை காக்க காவிரி பிரச்சினையில் அனைவரும் கூட்டாக போராட வேண்டும் என்று நடிகை சுமலதா எம்.பி. கூறினார்.

Update: 2019-06-18 22:00 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தின் நலனை காக்க காவிரி பிரச்சினையில் அனைவரும் கூட்டாக போராட வேண்டும் என்று நடிகை சுமலதா எம்.பி. கூறினார்.

சட்ட போராட்டம்

நடிகை சுமலதா எம்.பி., டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், வளர்ச்சி பணிகள் மற்றும் காவிரி பிரச்சினை அனைத்தும் மாநில அரசின் கையில் தான் உள்ளது என்றும், இதில் எம்.பி.யின் பங்கு எதுவும் இல்லை என்றும் கூறினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் இந்த கருத்தை சுமலதா நேற்று டெல்லியில் மறுத்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காவிரி பிரச்சினை தற்போது கோர்ட்டில் உள்ளது. அதனால் இதுபற்றி மாநில அரசு சட்ட ேபாராட்டம் நடத்த வேண்டும் என்று சொன்னேன். இதில் எம்.பி.யாக எனது பங்கு இல்லை என்று நான் சொல்லவில்லை. அதிக பொறுப்பு மாநில அரசுக்கு தான் உள்ளது என்று தான் சொன்னேன். ஆனால் எனது கருத்து திரிக்கப்பட்டுவிட்டது.

திசை திருப்ப முடியாது

காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் நலனை காக்க எம்.பி.க்கள், மாநில அரசு உள்பட அனைவரும் கூட்டாக போராட வேண்டும். எம்.பி.க்களுக்கு இதில் பங்கு இல்லை என்று கூறி பொறுப்பற்ற முறையில் பேசுபவர் நான் அல்ல. நான் எப்படிப்பட்டவர் என்பது மண்டியா மக்களுக்கு தெரியும்.

எனது கருத்தை தவறாக சித்தரித்து, மக்களை திசை திருப்ப முடியாது. தேர்தலின்போது அவ்வாறு செய்தனர். அந்த நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு சுமலதா கூறினார்.

மேலும் செய்திகள்